Friday, December 3, 2010

இனிய கானங்கள்



பெண்கள் மனதை வெளிபடுத்தும் பாட்டு, அதுவும் பெண் பாடிய பாட்டு, அதுவும் பெண் குரலிலேயே இருக்கிற பாட்டு, அதுவும் பத்து பாட்டு பாடவேண்டுமென்ற தொடர் பதிவுக்கு தோழி ஆசியா அழைத்து இருக்கின்றார்.மிகவும் மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் இப்பதிவை சற்று மெனக்கெட்டு பதிவு செய்கின்றேன்.ஆயிரம்தான் புதிய பாடல்கள் வந்து போனாலும் பழைய கானம் காலத்தால் அழியாதது.நாம் பிறக்கும் முன்னர் வெளிவந்த படத்தினைக்கூட ரசிக்கத்தூண்டும் வண்ணம் அமுதமாக காதில் வந்து பாயும் நான் ரசித்த,ரசிக்கும் பாடல்களை நீங்களும் கேட்டு மகிழ்ந்து கருத்தும் ஓட்டும் இட்டு விட்டு செல்லுங்களேன்.

எல்.ஆர் ஈஸ்வரியின் கணீர் குரல் என்றுமே எனக்கு பிடிக்கும்.ஆஹா..கேட்க கேட்க மனதில் உற்சாகமல்லவா பிறக்கும்.

1.துள்ளுவதோ இளமை
தேடுவதோ தனிமை
அள்ளுவதோ இனிமை
அத்தனையும் புதுமை



2.எல்.ஆர் ஈஸ்வரி ஹஸ்கி வாய்ஸில் பாடும் விடிவெள்ளி படத்தில் வரும் அற்புதமான பாடல்.எப்பொழுது கேட்டாலும் செய்யும் வேலைகளை ஒத்திப்போட்டு விட்டு லயித்து கேட்டு மகிழும் பாடல் இது.

காதோடுதான் நான் பாடுவேன்
மனதோடுதான் நான் பேசுவேன்
விழியோடுதான் விளையாடுவேன் -
உன் மடிமீதுதான் கண் மூடுவேன்

வளர்ந்தாலும் நான் இன்னும் சிறு பிள்ளைதான்
நான் அறிந்தாலும் அது கூட நீ சொல்லித்தான்
உனக்கேற்ற துணையாக எனை மாற்றவா?
உனக்கேற்ற துணையாக எனை மாற்றவா?
குல விளக்காக நான் வாழ வழி காட்டவா?

காதோடுதான் நான் பாடுவேன்....

பாலூட்ட ஒரு பிள்ளை அழைக்கின்றது
நான் படும் பாட்டை ஒரு பிள்ளை ரசிக்கின்றது
பாலூட்ட ஒரு பிள்ளை அழைக்கின்றது
நான் படும் பாட்டை ஒரு பிள்ளை ரசிக்கின்றது
எனக்காக இரு நெஞ்சம் துடிக்கின்றது
இதில் யார் கேட்டு என் பாட்டை முடிக்கின்றது


3.எல்.ஆர் ஈஸ்வரியின் பாடல்கள் எல்லாமே என்னைக்கவர்ந்தவைதான்.அதிலும் இந்த பாடலை உற்சாகமாக பாடி கேட்பவரையும் உற்ச்சாகத்திற்கு அழைத்து செல்லும் ரகசியம் எல் ஆர் ஈஸ்வரிக்கு கைவந்த கலை.கேளுங்கள்.மனதிற்குள் பூ பூக்கும்.

பட்டத்து ராணி பார்க்கும் பார்வை
வெற்றிக்குத்தான் என என்ன வேண்டும்
பட்டத்து ராணி பார்க்கும் பார்வை
வெற்றிக்குத்தான் என என்ன வேண்டும்
நில்லுங்கள் நிமிர்ந்து நில்லுங்கள்
சொல்லுங்கள் துணிந்து சொல்லுங்கள்
நில்லுங்கள் நிமிர்ந்து நில்லுங்கள்
சொல்லுங்கள் துணிந்து சொல்லுங்கள்

துடித்து எழுந்ததே
கொதித்து சிவந்ததே
கதை முடிக்க நினைத்ததே
நில்லுங்கள் நிமிர்ந்து நில்லுங்கள்
சொல்லுங்கள் துணிந்து சொல்லுங்கள்

நாடு கண்ட பூங்கொடி
காடு வந்த காரணம் ஒரு முறை எண்ணிப்பார்
தேடி வந்த நாடகம்
கூடி வரும் வேளையில் மறுபடி என்னைப்பார்
நாடு கண்ட பூங்கொடி
காடு வந்த காரணம் ஒரு முறை எண்ணிப்பார்
தேடி வந்த நாடகம்
கூடி வரும் வேளையில் மறுபடி என்னைப்பார்
வலை போட்டுப் பிடித்தாலும் கிடைக்காதது
துடித்து எழுந்ததே கொதித்து சிவந்ததே
கதை முடிக்க நினைத்ததே
பட்டத்து ராணி பார்க்கும் பார்வை
வெற்றிக்குத்தான் என என்ன வேண்டும்



4.இதுவும் பி.சுசீலா சோகம் இழையோட இழையோட பாடும் அழகிய பாடல்.

சொன்னது நீதானா சொல் சொல் சொல் என்னுயிரே
சம்மதம் தானா ஏன் ஏன் ஏன் என்னுயிரே
ஏன் ஏன் ஏன் என்னுயிரே
இன்னொரு கைகளிலே யார் யார் நானா
எனை மறந்தாயா ஏன் ஏன் ஏன் என் உயிரே
மங்கல மாலை குங்குமம் யாவும் தந்ததெல்லாம் நீதானே
மணமகளைத் திருமகளாய் நினைத்ததெல்லாம் நீதானே
என் மனதில் உன் மனதை இணைத்ததும் நீதானே
இறுதிவரைத் துணையிருப்பேன் என்றதும் நீதானே


5.பி.சுசீலாவின் கருத்தாழமிக்க பாடல்.குரலில் சோகம் இழையோட பாடும் பொழுது மனதை இறகால் வருடுவது போல் இருக்கின்றது.

நினைக்கத்தெரிந்த மனமே
உனக்கு மறக்கத்தெரியாதா?
பழகத்தெரிந்த உயிரே
உனக்கு விலகத்தெரியாதா


6.இதுவும் பி .சுசீலா பாடிய ஒரு அருமையான பாடல்.பாடலில் குரலை கொஞ்சலாக்கி அற்புதமாக பாடி அசத்துகின்றார்.

செல்லக்கிளியே மெள்ளப்பேசு
தென்றல் காற்றே அள்ளி வீசு


7.பி.சுசீலா பாடிய ஒரு அழகான கானம்.துணையின் பிரிவை ஏக்கத்துடன் எப்படி உருகிப்பாடுகின்றார் பாருங்கள்.

மாலைப் பொழுதின் மயக்கத்திலே
நான் கனவு கண்டேன் தோழி
மணம் முடித்தவர் போல் அருகினிலே-ஓர்
வடிவு கண்டேன் தோழி
மங்கை என் கையில் குங்குமம் தந்தார்
மாலையிட்டார் தோழி
வழி மறந்தேனோ வந்தவர் நெஞ்சில்
சாய்ந்து விட்டேன் தோழி
அவர் மறவேன் மறவேன் என்றார் உடனே
மறந்து விட்டார் தோழி
மறந்து விட்டார் தோழி ஆஆஆஆஆ
மாலைப் பொழுதின் மயக்கத்திலே
நான் கனவு கண்டேன் தோழி



8.எஸ் ஜானகி பாடிய மிக பிரபலாமான பாடல் 1970களில் அனைவரின் வாயிலும் முணுமுணுத்த பாடல்.அதில் சுஜாதாவின் எளிமையான நடனமும்,ஜானகியின் தேன் குரலும்,இளையராஜாவின் இசையும் சேர்ந்த ஒரு அற்புதமான கலவை.

மச்சானைப்பார்த்தீங்களா
மலைவாழைத் தோப்புக்குள்ளே,
குயிலக்கா கொஞ்சம்
நீ பார்த்துச்சொல்லு வந்தாரா பார்க்கலையே
அவர் வந்தாரா பார்க்கலையே


9.கன்னிப்பருவத்திலே என்ற படத்தில் எஸ் .ஜானகி உருகி,உருகிப்பாடி நம்மை உருக வைக்கும் பாடல் இது.

பட்டுவண்ண ரோசாவாம்
பார்த்தகண்ணு மூடாதாம்
10.வாணி ஜெயராம் பாடிய எனக்குமட்டுமல்ல பெண்கள் அனைவருக்கும் பிடித்த ஒரு பாடல்.இசையும் வாணிஜெயராமின் பாஸந்தி குரலும் சேர்ந்து..ஆஹா..அடடா...எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டு ரசிக்கலாம்.

மல்லிகை-என் மன்னன் மயங்கும்
பொன்னான மலரல்லவோ?
எந்நேரமும் உன்னாசைபோல்
பெண்பாவை நான் பூச்சூடிக் கொள்ளவோ?
வான் மேகங்கள் வெள்ளி ஊஞ்சல் போல்
வான் மேகங்கள் வெள்ளி ஊஞ்சல் போல்
திங்கள்மேனியைத் தொட்டுத் தாலாட்டுது!
குளிர் காற்றிலே தளிர் பூங்கொடி!
கொஞ்சிப்பேசியே அன்னபப் பாராட்டுது
என் கண்ணன் துஞ்சத்தான்
என் நெஞ்சம் மஞ்சம்தான்
கையோடு நானள்ளவோ
என் தேவனே உன் தேவி நான்
இவ்வேளையில் உன் தேவை என்னவோ

இந்த தொடர் பதிவை

மேனகா

கீதாஆச்சல்

ஹுசைனம்மா


மின்மினி.

லக்ஷ்மி அம்மா

தேனம்மை

ராமலக்ஷ்மி

சாருஸ்ரீராஜ்

ஜலீலா

இலா

ஆகியோரை பதிவிட அழைக்கின்றேன்.மேற்கண்டவர்களின் பாடல் ரசனை எப்படி உள்ளது என்று அறிய ஆவல்.விரைவாக பதிவிடுங்கள் நட்புக்களே.

டிஸ்கி: பாடல்வரிகள் கொண்ட சிகப்புவண்ண எழுத்துக்களை கிளிக் செய்து பாடல்களை ரசியுங்கள்.




Wednesday, December 1, 2010

கோடீஸ்வரர்களின் வங்கி.





கணக்கு ஆரம்பிக்க தனி மேலாளர்

காஃபி ஷாப்

ஆடை மாற்றும் நவீன அறைகள்

ஓய்வெடுக்கும் அறைகள்

கான்ஃப்ரன்ஸ் அறைகள்

24 மணி நேர பாதுகாப்புப்பெட்டக வசதி.

பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்து எடுத்த நகைகளை அங்கேயே அலங்கார அறையில் அமர்ந்து அலங்கரித்து வைபவங்களுக்கு சென்றுவிட்டு மீண்டும் அணிந்த நகைகளுடன் வங்கிக்கு திரும்பி பெட்டகத்தில் அணிந்திருக்கு நகைகளை கழற்றி வைக்கும் வசதி.

வாடிக்கையாளர்களை வீட்டுக்கே வந்து காரில் அழைத்து சென்று வேலை முடிந்ததும்
வீட்டிற்கு திரும்ப கொண்டு விடும் அளப்பறிய சேவை.

வரிகள், சார்ட்டர்ட் அக்கெளண்டன்ட் தொடர்பான உதவிகள்.

விரும்பினால் வாடிக்கையாளர்களின் இருப்பிடத்திற்கே நேரில் வந்து வங்கியின் சேவைகளை செய்து முடித்துத்தரும் ஊழியர்கள்.

வீடியோ கான்ஃப்ரன்ஸ் வசதி

வைஃபி வசதி

லிஸ்டைப்பார்த்து வியப்பாக உள்ளதா?வேறு எந்த நாட்டிலோ இந்த வங்கி அமையப்பெறவில்லை.நமது நாட்டிலேயேதான்.கசங்கிப்போன பத்து ரூபாய் நோட்டுகளை வைத்துக்கொண்டு கேஷ் கவுண்டரில் பணம் கட்ட கியூவில் நிற்கும் குப்பை பொறுக்கும் தொழிலாளியைக்கூட வாடிக்கையாளராக வைத்திருக்கும் அதே பாரதஸ்டேட் வங்கிதான் இப்படி ஒரு நட்சத்திரக்கிளையை ஹைதரபாத் நகரில் ஆரம்பித்து இருக்கின்றது.

கோடிகளில் புரள்பவர்களுக்கு மட்டுமே தொடங்கப்பட்ட இவ்வங்கி ஹைதராபாத் பஞ்ஞசரா ஹில்ஸ் பகுதியில் "கோஹினூர் பஞ்ஞசரா பிரிமியம் பேங்கிங் செண்டர்" என்ற பெயரில் 4000 சதுர அடி பரப்பளப்பளவில் இந்த ஒரே கிளைக்கு 80 லட்ச ரூபாயை செலவு செய்து நடச்சத்திர வங்கியை பணக்கற்றைகளில் நீச்சலடிக்கும் கோடீஸ்வரர்களுக்கு வலைவிரித்து இருக்கின்றது.குறிப்பாக ஹைதராபாத் நிஜாம் பகுதியில் வசிக்கும் கோடீஸ்வர்களான பழைய இஸ்லாமிய நவாபுகளை சுண்டி இழுக்கும் வண்ணம் இக்கிளை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

புகழ் பெற்ற வைரத்தை தன் பெயராக கொண்ட இவ்வங்கி பிஸினஸ் செண்டர்களுக்கு மாணிக்கம்,மரகதம் - Ruby and Emerald என்றும்,காஃபி ஷாப்புக்கு முத்து - pearl என்றும்,கான்ஃப்ரன்ஸ் ஹாலுக்கு நீலக்கல் - Sapphire என்றும்,பாதுகாப்பு பெட்டக அறைக்கு கோமேதகம் - Topaz என்றும் நவரத்தினக்களின் பெயர்களை சூட்டி அலங்கரித்து இருக்கின்றது.


இந்த வங்கில் கணக்கு வைத்துக்கொள்ள தகுதியான அம்சங்கள்.
1.பெரும் கோடீஸ்வரர் ஆக இருக்க வேண்டும்.

2.கோடீஸ்வரர் தான் என்று வங்கியே தீர்மானித்து வங்கி நிர்வாகமே வாடிக்கையாளருக்கு கணக்கு தொடங்க அழைப்பு விடுக்க வேண்டும்.

3.கணக்கு வைத்துக்கொள்ள குறைந்த பட்சத்தொகை ஜஸ்ட் ஒரு கோடி மட்டுமே.

4.ஹ்ம்ம்ம்ம்ம்....நமக்கும் தொலைத்தொடர்பில் ஒரு அமைச்சர் பதவியை போட்டு கொடுத்தாங்கன்னா ஒன்றென்ன ரெண்டு ,மூன்று அக்கவுண்டே இந்த வங்கியில் சுலபமாக திறந்து விடலாம்.



Thursday, November 18, 2010

அஞ்சறைப்பெட்டி



சாலைகளில் வழிநெடுகிலும் விளம்பர நிறுவனத்தினர் லட்சகணக்கில் செலவு செய்து வைக்கும் விளம்பரபோர்டுகளை மாநகராட்சி அத்தனையும் அகற்றி விளம்பரத்துறையினரை பெரும் நஷ்டத்துக்குள்ளாக்கி வருகின்றது என்பது கண் கூடாக காணும் அவலம்.இதற்கு விளம்பர போர்டுகள் இருப்பதால் விபத்துகள் நடந்தேறி வருகின்றது என்று கூறுகின்றனர்.வழி நெடுகிலும் சுவர்களில் கண்களையும் கருத்தையும் கவரும் விதம் அழகிய படங்களை வரைந்து அழகு படுத்துகிறேன் பேர்வழி என்று சிலருக்கு லாபம் கொடுத்து இருக்கின்றார்களே.அந்த சித்திரங்களால் விபத்து நடக்காதா என்ன?இல்லை இனி சாலைகளில் விளம்பர போர்டுகள் நிறுவப்படாமலே இருந்து விடுமா?


தமிழ்நாட்டில்,குறிப்பாக சென்னையில் ஆள் கடத்தல் சம்பவம் நிறைய நடகின்றது.இளைஞர்களையும் கடத்திப்போய் கோடிக்கணக்கில் பேரம் பேசுகின்றனர்.சமீபத்தில் நடந்தேறிய ஒரு தெரிந்த குடும்பத்திற்கு நேர்ந்த அவலம் மிகவும் வருந்ததக்கது.குற்றவாளிகளை பிடித்து அதிகபட்ச தண்டணை கொடுத்தால்த்தான் இது போன்ற அவலங்கள் நடந்தேறுவது குறையும்.

தியாகராயநகரில் இருக்கும் மன்னார்ரெட்டி தெருவில் ஒரு டாஸ்மாக் கடை.வழிநெடுகிலும் கையில் பாட்டிலும்,கிளாஸுமாக குடிமக்கள் பண்ணும் அலப்பரை,சண்டை நிகழ்வுகள் சகிக்க முடியவில்லை. போததற்கு சுண்டல் வண்டிகளும்,பஜ்ஜி வண்டிகளும் தெருவையே அடைத்துக்கொண்டு அந்த பகுதில் பெண்களும்,சிறுவர்களும் நடந்து செல்லவே அச்சப்பட வேண்டிய சூழ்நிலை.அங்கு குடி இருப்பவர்களின் நிலை மிகவும் பரிதாபத்திற்குறியது.இந்த தெருவில்மட்டுமல்ல சென்னையின் அநேகப்பகுதியில் இந்த அவலம் நடந்தேறி வருகின்றது.இன்னொரு கொடுமை என்னவென்றால் மிக பிரபலமான ஒரு மாலில் இதே கடையைக்கண்டு அதிர்ந்தேன்.அரசாங்கம் லாபம் பெறும் நோக்கத்திற்காக பொது மக்கள் இத்தனை அவஸ்தைப்பட வேண்டுமா?எப்பொழுது மனசாட்சி உள்ள அரசியல் வாதிகள் பிறப்பார்கள்?

எங்கள் வீட்டருகே அதிகம் பிரபலமில்லாத ஒரு தேசிய மயமாகப்பட்ட வங்கியின் கிளை சமீபத்தில் திறந்தனர்.அதில் கணக்கு வைத்துக்கொள்ள வேண்டி வங்கிக்கு சென்றேன்.தேவையான சில proof கள் எடுத்து சென்றுஇருந்தாலும் introducer இல்லாமல் புதிதாக கணக்கு தொடங்க இயலாது என்றார்.எனக்கு தெரிந்தவர்கள் யாரும் இல்லாததை எடுத்து சொன்னேன்.ஆனால் வங்கியின் மேலாளர் "அதுதான் ரூல்ஸ்" என்று அழுத்தமாக கூறிவிட்டார்."யாரவது கிடைத்தால் மீண்டும் வருகிறேன்" என்று கூறி அப்ளிகேஷனை வாங்கிக்கொண்டு திரும்பிய பொழுது பின்னால் இருந்து "மேடம் மேடம்.." என்ற குரல் கேட்டு திரும்பினேன்.ஒரு இளைஞர் "introducer கையெழுத்து வேண்டுமென்றால் நான் போட்டுகொடுக்கிறேன்.இதே பிராஞ்சில் நான் அக்கவுண்ட் வைத்துள்ளேன்" என்றார்.மனதில் அவநம்பிக்கையுடன் அவரை நான் பார்த்த பொழுது அடுத்த வார்த்தையில் அதிர்ந்து போனேன்."அதிகம் வேண்டாம் மேடம் ஒரு திரீ ஹண்ட்ரட் ருபீஸ் கொடுங்கள் போதும்" என்றாரே பார்க்கலாம்.கையில் இருந்த ஹேண்ட் பேக்கை இறுக்கமாக பிடித்துக்கொண்டு பதில் ஏதுவும் சொல்லாமல் ஓட்டமும் நடையுமாக வீட்டுக்குள் மூச்சிரைக்க ஓடி வந்து விட்டேன்.எப்படி எல்லாம் மனிதர்கள் இருக்கிறார்கள் பாருங்கள்.

Monday, November 15, 2010

ஈதுல் அல்ஹா நல்வாழ்த்துக்கள்

இன்நன்னாளில் அனைவருக்கும் என் இனிய பெருநாள் நல்வாழ்த்துக்கள்.குடும்பத்தினருடனும்,நட்புக்களுடனும்,நெருங்கியவர்கள் கூடவும் இன்னாளை சந்தோஷமாக கொண்டாடிட வாழ்த்துகிறேன்.
ஹஜ்ஜுப்பெருநாள் என்றால் புத்தாடை,தக்பீர்,ஈதுதொழுகை,குர்பானி,பெருநாள்
பணம்,கொண்டாட்டம் ,இறைச்சிவகை கலந்த சாப்பாடு குறிப்பாக பிரியாணி என்று நீண்டு
கொண்டே போகும்.ஒரு முறை வித்தியாசமான சாப்பாடு செய்து குடும்பத்தினரை அசத்துங்களேன்.புது வகை குறிப்புகளுக்கு இருக்கவே இருக்கின்றது சமையலில் கொடிகட்டிப்பறக்கும் வலைப்பூ தோழிகளின் குறிப்புகள்.கண்டு மகிழ்ந்த பின் வீட்டில் செய்து உண்டு மகிழ்ந்து பெருநாளை சந்தோஷமாக கொண்டாடுங்கள்.


சிக்கன் பிரைட் ரைஸ்


செஸ்வான் மட்டன் நூடுல்ஸ்

கிரில்ட் சிக்கன்


சிக்கன் லாலிபாப்

சில்லி பிரான்

மட்டன் ரோல்

தந்தூரி சிக்கன்.

Sunday, November 14, 2010

கலெக்டர் மாப்பிள்ளை

மினி சிறுகதை

"மாப்பிள்ளை உயரமும்,உயரத்துக்கேற்ற பருமனும் பார்க்க வாட்டசாட்டமாக இருக்கார்."

"உத்தியோகத்துக்கேற்ற உருவமும் பிளஸ்பாயிண்ட்தானே?"

"பார்க்கின்ற கலெக்டர் உத்தியோகத்தில் சின்ஸியாரிடீன்னா அவ்வளவு சின்ஸியாரிட்டீ."

"அடடா..பதவி இருக்கற இடத்திலே பண்பும் இருந்ததுன்னா இன்னும் சந்தோஷம்தான்"

"ரொம்பவெல்லாம் ஆசைப்படலே.ஒரு அம்பதாயிரம் கேஷா கொடுத்தால் போதும்"

"அதுக்கென்ன?பேஸா கொடுத்துடலாம்"

"ஸ்கூட்டி பெப் ஒன்று போதும்"

"என்னங்க இது..ஆக்சுவலா காரே கேட்கனும் நீங்க.ஆனால் ரொம்ப ஆசைப்படாதவரா இருக்கீங்க.நான் ஒரு அப்பாச்சியையே வாங்கித்தரச் சொல்லுறேன்."

"அது உங்கள் தாராள மனசை காட்டுது.அரைச்சவரனில் ஒரு மோதிரம் போதும்"

"சுண்டுவிரல் பருமனுக்கு செய்ன் தரலாம் என்றிருக்கிறார்.மூத்த மாப்பிள்ளைக்கும் அப்படித்தான் செய்தார்.இருந்தாலும் நீங்க ரொம்ப எளிமையா இருக்கீங்க சார்"

"சீர்வரிசை தட்டெல்லாம் அதிகமா தந்து தடபுடல் படுத்த வேண்டாம்"

"நீங்க வேற..இதெல்லாம் தடபுடல் படுத்தினால் தான் சுற்றத்தார் அவரை மதிப்பார்ன்னு சொல்லிட்டு இருக்கார்"

"கல்யாணம் எல்லாம் ரொம்ப கிராண்டா நடத்தனும்ன்னு இல்லை..ராத்திரி ரிஷப்ஷன்,காலையிலே முகூர்த்தம்..சின்னதா கல்யாணமண்டபம் பிடிச்சால் போதும்"

"என்னங்க இப்படி சொல்லீட்டீங்க..பொண்ணோட தோப்பனார் மேயர் ராமனாதன் மண்டபத்தில் வைத்துத்தான் கல்யாணம் பண்ணனும் என்று சொல்லிட்டு இருக்காரே.அவருக்கும் எக்கசக்க ஆட்கள்.உங்கள் பையன் உத்தியோகத்திற்குத்தகுந்த மாதிரி உங்கள் பக்கம் இருந்தும் ஆட்கள் நிறைய வருவார்கள்.."

"அப்படீங்கறீங்க"

"பையன் எந்த மாவட்டதுலே கலெக்டரா இருக்காருங்க"

"செல் போன் கம்பெனியிலே காஞ்சிபுரமாவட்டதிலே பில் கலெக்டரா இருக்காரு"



Monday, November 8, 2010

என் தந்தை

இங்கே கிளிக் செய்து பாருங்கள்



சிங்கம் என்றால் என் தந்தைதான்
செல்லம் என்றால் என் தந்தை தான்
கண் தூங்கினால் துயில் நீங்கினால்
என் தந்தை தான் என் தந்தை தான்
எல்லோருக்கும் அவர் விந்தை தான்

விண்மீன்கள் கடன் கேட்கும் அவர் கண்ணிலே
வேல் வந்து விளையாடும் அவர் சொல்லிலே
அவர் கொண்ட புகழ் எங்கள் குலம் தாங்குமே
அவர் பேரை சொன்னாலே பகை நீங்குமே
அழியாத உயிர் கொண்ட என் தந்தையே
அழியாத உயிர் கொண்ட என் தந்தையே
ஆண் வடிவில் நீ என்றும் எம் அன்னையே

வீர்த்தின் மகன் என்று விழி சொல்லுமே
வேகத்தின் இனம் என்று நடை சொல்லுமே
நிலையான மனிதன் என வேர் சொல்லுமே
நீதானே அசல் என்று ஊர் சொல்லுமே
உன் போல சிலர் இங்கு உருவாகலாம்
உன் உடல் கொண்ட அசைவுக்கு நிகர் ஆகுமா?

எப்போதும் தோற்காது உன் சேவைதான்
இருந்தாலும் இறந்தாலும் நீ யானைதான்
கண்டங்கள் அரசாலும் கலைமூர்த்தி தான்
கடல் தாண்டி பொருள் ஈட்டும் உன் கீர்த்தி தான்
தலை முறைகள் கடந்தாலும் உன் பேச்சுதான்
தந்தயெனும் மந்திரமே என் மூச்சுதான்

Thursday, November 4, 2010

தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

நாளை தீபாவளி கொண்டாடவிருக்கும் பதிவுலக நட்புக்களுக்கு என் இதயம் கனிந்த இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!




Monday, November 1, 2010

சென்னை மால்கள்

கடந்த நூற்றாண்டில் சிறிய அளவு உருவாக்கப்பட்ட சென்னை நகரின் மத்தியில் அமையப்பட்ட ஸ்பென்சர் பிளாசா விருட்சமாக வளர்ந்து சென்னையின் முக்கிய அடையாளமாக கொடி கட்டி பறந்தது.

அதனைத்தொடர்ந்து பிரின்ஸி பிளாஸா,அல்சாமால் ,சிசன் காம்ப்ளக்ஸ் போன்றவை எக்மோரில் அடுத்தடுத்து உதயமாகியது.1990 களில் இளசுகளின் சரணாலயமாக அல்சா மால் விளங்கியது என்றால் மிகை அல்ல.நாகரீகமே அங்கிருந்துதான்ஆரம்பம் என்ற ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்தியது.அல்சா மால் செல்லாத காலேஜ் கெய்ஸ் இல்லவே இல்லை எனும் அளவுக்கு இளம் பருவத்தினர் ஒரு காலம் இம்மாலில் ஆட்சி புரிந்தனர்.அதே பகுதியில் பவுண்டன் பிளாசா தோன்றியது.அன்றைய நாகரீக யுகத்தின் ஆடை,அணிகலண்கள்,அழகை மெருகேற்றும் அலங்காரச்சாமான்கள்,வாசனைத்திரவியங்கள் என்று கொட்டி கிடப்பதை கண்டு இளசுகள் மட்டுமல்லாமல்,பெரியவர்களும் படை எடுத்து சென்றனர்.

இதே போல் மவுண்ட் ரோடில் பார்ஸன் காம்ப்ளக்ஸ்,நுங்கம்பாக்கத்தில் இஸ்பஹானி செண்டர்,சேத்துப்பட்டில் ஷாப்பர் ஸ்டாப்,புரசைவாக்கம் அபிராமி மால்,வட சென்னையில் பத்னி பிளாசா,தி.நகர் -- பாண்டிபஜாரில் சிறிதும் பெரிதுமாக மாயா பிளாசா,பாத்திமா பிளாசா,செல்லாமால் ,காசி ஆர்கேட்,ஜி என் செட்டி ரோடில் அங்கூர் பிளாஷா ,வடபழனியில் ராஹத் பிளாஸா போன்றவை ஆங்காங்கே உதயமாகியது.


இவை எல்லாம் ஒரு புறம் இருக்க மைலாப்பூரில் உதயமான சிட்டி செண்டர் சென்னைக்கு ஒரு தாக்கத்தினை ஏற்படுத்தி பரபரப்பாக பேசப்பட்டது.இளையவர்கள் மட்டு மின்றி பெரியவர்கள்,முதியவர்கள் கூட வீல் சேரில் வந்து ஆவலுடன் சுற்றி ,ஷாப்பிங் செய்து அந்த ஷாப்பிங் மாலையே கலகலப்பாகி விட்டனர்.ஹைடெக் திரை அரங்குகள்,சர்வதேச தரத்தில் உணவகங்கள்,சூப்பர்மார்க்கெட்டுகள்,பிராண்டட் ஷாப்கள் என களைகட்டியது.

அதனைத்தொடர்ந்து அமிஞ்சிகரையில் அம்பா ஸ்கை வாக் உதயமாகி அந்த சாலையையே ஸ்தம்பிக்க வைத்து விட்டது.
சமீபமாக ராயப்பேட்டையில் இவற்றை எல்லாம் தூக்கிச் சாப்பிடும் வகையில் பிருமண்டமான அளவில் எக்ஸ்பிரஸ் அவென்யூ உதயமாகி சக்கை போடு போட்டுக்கொண்டுள்ளது.

புதிய புதிய மால்கள் உதிக்க ,உதிக்க பழைய மால்கள் களை இழந்து வருவது வருந்ததக்க உண்மை.நாளொன்றுக்கு சுமார் ஒரு லட்சம் நபர்கள் வந்து செல்லக்கூடிய ஒரு மாலில் மற்றுமொரு புதிய மால் உருவான காரணத்தினால் வெறும் 20000 - 30000 நபர்கள் மட்டுமே வந்து செல்லக்கூடிய நிலை ஏற்படுத்தி விட்டது.

வாடிக்கையாளர்களின் வருகையை அதிகரிக்க என்னென்ன திட்டங்கள்,சலுகைகள்,குலுக்கல்கள்,பரிசுகள் வழங்க முடியுமோ அத்தனையும் வழங்கி பிரயத்தனப்பட்டு வருகின்றதுதான் இன்றைய மால்களின் நிலை

பல வணிகவளாகங்களில் சூப்பர்மார்க்கெட்டுகள் களை இழந்து போய்க்கொண்டுள்ளது.வெளி நாடுகளில் மக்கள் தொகை குறைவாக இருந்தாலும்,இங்குள்ளதை விட அதிகளவு எண்ணிக்கையில் மால்கள் எங்கெங்கும் கொட்டிக்கிடந்தாலும் அங்கு எப்பொழுதும் ஈ மொய்ப்பதைப் போல் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படுவதை காணலாம்.ஆனால் மக்கள் தொகை பன்மடங்கு அதிகளவு உள்ள சென்னையில் ஏன் இப்படி என்று மனம் ஒப்பிட்டு,அலசிப்பார்க்கும் பொழுது புரிகின்றது ஒரு நிஜம்.
100 கிராம் சர்க்கரையும்,25 கிராம் தேயிலையும் அன்றாடம் வாங்கி டீ போட்டு காலையில் குடிப்பவர்கள் அதிகம்.பாக்கெட் ஷாம்பூ வாங்கி குளித்து விட்டு காலை உணவுக்கு 1/4 கிலோ ரவையையும் மதிய உணவுக்கு 1/2 கிலோ அரிசியும் 100 கிராம் பருப்பும்,50 மில்லி சமையல் எண்ணெயும் வாங்கி செல்பவர்கள் அதிகம்.கீழ்த்தட்டு மக்கள் அதிகம் வசிக்கும் இங்கே இவர்கள் 100 கிராம் சர்க்கரையும் ,50 கிராம் தேயிலையும் சூப்பர் மார்க்கெட் சென்றா வாங்க முடியும்?அண்ணாச்சி கடைகளை நாடித்தான் செல்லுவார்கள்.

அதே சமயம் இதே அண்ணாச்சி கடைகளுக்கும்,சூப்பர் மார்க்கெட்டுகளுக்கும் விலையில் நிறைய வித்தியாசம் இருப்பதால் நடுத்தர வர்க்கத்தினர் கூட பெரிய மால்களில் சென்று ஷாப்பிங் செய்யப்பயப்படுகின்றனர் என்பது என்னவோ உண்மை.

இந்த ரீதியில் சென்றால் ,பிருமாண்டமாக பெரிய பெரிய மெகா மால்கள் உருவெடுத்துக்கொண்டிருந்தால் பழைய மால்கள் நிலைமை கவலை அளிக்கக்கூடியதாகவே உள்ளது.
வரவிருக்கும் பெரிய மால்கள் பற்றி அறிய இங்கே பாருங்கள்

Sunday, October 17, 2010

இனிய இல்லம் - 2

இனிய இல்லம் இரண்டாம் பாகத்தினை படிப்பதற்கு முன் படிக்காதவர்கள் முதல் பாகத்தினையும் இங்கு கிளிக் செய்து படிக்கவும்.
இல்லப்பராமரிப்பை வீட்டிற்கு வெளியில் இருந்து ஆரம்பிப்போமா?

வீட்டின் வெளிப்பகுதி:
தனி வீடோ அடுக்குமாடிவீடோ வீட்டிற்கு வெளியில் குப்பைகள் இன்றி சுத்தமாக வைத்து தூசி கிளம்பாமல் நீர் தெளித்து,கேட் கிரில்கள்,காம்பவுண்ட் விளக்குகளை,வீட்டிற்கு வெளிப்பகுதியில் உள்ள ஜன்னல் கிரில்களை அவ்வப்பொழுது சுத்தம் செய்து வந்தால் வீடே தனித்துவமாக காட்சி அளிக்கும்.காம்பவுண்டுக்குள் செடி கொடிகள் இருந்தால் காய்ந்த தளைகள் அகற்றி,அவ்வப்பொழுது மண் சட்டிகளை இடம் மாற்றி கீழே படிந்துள்ள மண் துகள்களை சுத்தம் செய்வதைக்கடை பிடியுங்கள்.வீட்டிற்கு முன் செருப்புகள் சிதறிக்கிடக்காமல் ஸ்டேண்ட் வாங்கி வைத்து வீட்டிலுள்ளவர்களை செருப்பை கழற்றும் பொழுது ஸ்டேண்டில் கழற்றி வைக்க பழக்குங்கள்.வாசலுக்கு வெளியில் உள்ள கால் மிதி தூசி தும்புகள் இல்லாமல் தினமும் தட்டி சுத்தப்படுத்த தவறாதீர்கள். மாதம் இரு முறையாவது சோப்பினால் சுத்தம் செய்யுங்கள்.கதவு,நிலைப்படி போன்றவற்றை துணியினால் துடைத்து ஒட்டடை இன்றி சுத்தம் செய்யுங்கள்.

ஹால்:
நம்மை பிறர் மதிப்பீடு செய்வதில் வீட்டின் முன்னறை பெரும்பங்கு வகிக்கின்றது.விலைஉயர்ந்த சோபாக்கள்,கம்பளங்கள்,சாண்டிலியர்கள்,ஓவியங்கள் போன்றவற்றை அடுக்கி அழகு படுத்த வேண்டுமென்பதில்லை.இருப்பவற்றை சுத்தமாக வைத்து இருந்தாலே போதும்.தூசிகள் இல்லாத சோபா,கோடிழுத்தால் கோடு வராத டீபாய்,சோபாவுக்கு அடியில் குப்பைகள் தேங்காத நிலை,தொலைக்காட்சி பெட்டி இருக்கும் அலமாரியில் பொருட்கள் கன்னா பின்னவென்று இராமல் நேர்த்தியாக அடுக்கி வைத்தல்,அன்றைய தினசரியைத்தவிர மற்ற பழைய பேப்பர்களை பிறர் கண்களுக்கு படாமல் மறைவான இடத்தில் வைத்தல்,தினசரி,மற்றும் புதிய பத்திரிகைகள் போன்றவற்றை நேர்த்தியாக அடுக்கி வைத்தல்,மாதம் ஒரு முறை துவைத்து மாற்றிய கர்ட்டன்கள்,விளக்குகள் பேன் போன்றவற்றை துணியினால் 10 நாட்களுக்கு ஒரு முறையாவது துடைத்து சுத்தப்படுத்துதல் போன்றவற்றில் உறுதியாக இருங்கள்.ஆங்காங்கு உங்கள் பொருளாதர வசதிக்கு ஏற்ற படி படங்கள்,பூங்கொத்துக்கள் போன்றவற்றை மாட்டினால் வீடு அழகு கொஞ்சும்.

படுக்கையறை:
கட்டில் வாங்கினால் ஸ்டோரேஜ் கட்டிலாக பார்த்து வாங்குதல் படுக்கை அறை அடைசல் இல்லாமல் இருக்க வழிவகுக்கும்.காலையில் எழுந்ததுமே போர்வைகளை மடித்து தலை அணைகளை எல்லாம் அப்புறப்படுத்தி கட்டிலுக்கடியில் இருக்கும் ஸ்டோரேஜில் அடுக்கி வைத்து,பெட் சீட்டை உதறி சுருக்கமில்லாமல் விரித்து வையுங்கள்.வாரம் ஒரு முறை பெட்ஷீட் மாற்றும் பழக்கத்தினை மேற்கொள்ளுங்கள்.அதே போல் படுக்கையறையில் இருக்கும் திரைச்சீலைகளையும் அடிக்கடி துவைத்து சுத்தம் செய்யுங்கள்.படுக்கை அறையில் நசநசவென்று பொருட்கள் அடைத்து இருப்பதை விட எளிமையாக சுத்தமாக வைத்து இருந்தால் நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.குளிர்சாதன வசதியுடன் கூடிய படுக்கையறையாக இருந்தால் நறுமணமாக இருப்பதற்கு செலவு செய்யத்தயங்காதீர்கள்.இதமான வர்ணத்தில் பெயிண்டும்,ஒரு சில இதமான ஓவியங்களும் மனதிற்கு இதம் தரும்
கப்போர்ட்:
அநேகமாக எல்லாப் படுக்கை அறைகளிலும் இருக்கும்.ஆறுமாதத்திற்கு ஒரு முறையாவது உள்ளே இருக்கும் பொருட்கள் அனைத்தையும் எடுத்து நன்கு துணியால் துடைத்து பேப்பர் மாற்றுவதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள்.அநேக வீடுகளில் நியூஸ்பேப்பரை கப்போர்ட் தட்டுகளுக்கு விரித்து பொருட்களை அடுக்குவார்கள்.இந்த முறை கனமான சார்ட் பேப்பர்,அல்லது பிரவுன் ஷீட்டை விரித்துப்பாருங்கள்.இனி அந்த பழக்கத்தை விடவே மாட்டீர்கள்.அழகாக இடைவெளி விட்டு அடுக்கி,நாப்தலின் பால்களை ஆங்காங்கே வைத்து ,துணிகளும் மற்ற பொருட்களையும் தனித்தனி அடுக்குகளில் வைத்து தேடினால் உடனே கிடைக்கும் படியாக அமைத்துக்கொள்ளுங்கள்.
பாத் ரூம்:
இது அநேக வீடுகளில் படுக்கையறையுடன் அமைந்திருக்கும்.இதனை அதிகம் கவனம் செலுத்தி எப்பொழுதும் உணர்ந்த நிலையில் வைத்திருந்தால் ஆரோக்கியமாக இருக்கும்.குளிக்கும் முன்னர் தினமும் சுத்தப்படுத்தும் வழக்கம் அவசியம்.வாஷ் பேசின்கள்,டாய்லெட்டுகளை அதற்குறிய கிளீனிங் உபகரணங்களை வைத்து சுத்தப்படுத்தி,தரையை பிரஷ் செய்து நறுமணயூட்டிகளை மாட்டி வையுங்கள்.ஒரு வைப்பரை வாங்கி வைத்து ஒவ்வொருவரும் உபயோகித்தபின் வைப்பரால் நீர் தேங்காத வண்ணம் சுத்தம் செய்யும் பழக்கத்தினை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏற்படுத்திக்கொண்டால் நலம் பயக்கும்.வைப்பர்,புரூம்,பிரஷ் போன்றவற்றை பாத்ரூமின் மூலையில் சாய்த்து வைப்பதைத்தவிர்த்து சின்ன ஹூக்குகளை ஓரமாக பொருத்தி அதில் மாட்டி வைத்தால் தரையை இலகுவாக சுத்தம் செய்யலாம்.டாய்லெட்டினுள் இருக்கும் கேபினெட்டின் கண்ணாடி மற்றும் கேபினெட்டை ஈரத்துணியால துடைத்து பொருட்களை நேர்த்தியாக அடுக்கி வைத்து நாப்தலின் உருண்டைகளைப்போட்டு வையுங்கள்.பழைய பிரஷ்கள்,காலியான பேஸ்ட்கள்,குப்பிகள்,காலியான சாஷேக்கள் போன்றவற்றை உடனுக்குடன் அப்புறப்படுத்துங்கள்.ஜலபாதையில் ஒரு போதும் முடி தங்கி இருக்காதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்.தரையை மட்டுமின்றி சுவரில் பதித்திருக்கும் டைல்ஸ்,மற்றும் பிட்டிங்குகளையும் அவ்வப்பொழுது அதற்குறிய கிளீனிங் லிக்விட் கொண்டு சுத்தம் செய்ய தவறாதீர்கள்.
அடுத்து ஒரு இடுகையை வீட்டின் இன்னும் பிற இடங்களைப்பார்ர்ப்போம்.

படங்கள்:கூகுள்



Monday, October 11, 2010

ஆற்றல் யாருக்கு அதிகம்?

ஆற்றல் யாருக்கு அதிகம்?

எங்கள் வீட்டு வட்டமேஜை மாநாட்டில் (அதாங்க..டைனிங் டேபிள்) அமர்ந்து சாப்பிட்டோமா எழுந்தோமா என்றிராமல் (ஒரு வேளைஅன்றைய மெனு "உப்புமா"ன்னா இந்த பதிவே ஜனித்து இருக்காதாயிருக்கும்)வாய் லொடலொடத்ததில் "விஷ்க்.."என்று ஒரு வினா என் வாயில் இருந்து புறப்பட்டதுதான் மேலிருக்கும் தலைப்பு.

இப்படி மொட்டையா சொன்னா எப்பூடீ? எனக்கேட்கப்படாது.மேலே படியுங்கோ.

ஆற்றல் யாருக்கு அதிகம் ஆணுக்கா?பெண்ணுக்கா?

பலத்த யோசனைக்குப்பிறகு"வேறு என்னத்தை சொல்ல?பெண்களுக்குத்தான்"2010 இன் மகா சரண்டர்.இது யாரா இருக்கும்?சாட்சாத் என் ரங்ஸ்தான்.(அப்புறமா வழியில் போகிற ஓணானை எதுக்கு மடியில் கட்டிக்கிட என்ற டயலாக் அடித்தது எல்லாம் வேறு விஷயம்.)
சரி இது எவ்வளவுதூரம் உண்மை என்று விஞ்ஞானப்பூர்வமாகவும்,அனுபவப்பூரவமாகவும் அறிந்ததை அலசுவோமா?
அதுக்கு முன்னாடி இதனை காமெடியாக எடுத்துக்கொள்ளாத எதிர்பாலினர் மற்றுமின்றி என் பாலினர் சிலரும் தயவு செய்து மன்னிக்க!

1.உலகில் இனப்பெருக்கம் என்பது அத்தியவசியமானது.இது இல்லையேல் உலகமே ஸ்தம்பித்து விடும்.இதற்கு பெரும் பங்கு வகிப்பது தங்கமணிகள்தான்.

2.அறிவை வளர்க்கும் புனித இடமான கல்விஸ்தலங்களில் பெரும்பான்மையினர் பெண்கள்தான்.ஏனெனில் அவர்களுக்குத்தான் பொறுமை அதிகம் என்று கல்வி நிர்வாகத்தினரால் தேர்ந்தெடுத்து வெற்றியும் பெறுகின்றனர்.

3.ஆண் குழந்தையை விட பெண் குழந்தைகள் தான்எல்லாவற்றிலும் அதாவது குப்புறப்படுப்பது,சிரிப்பது,தவள்வது,நடப்பது,பேசுவது எல்லாம் முந்திக்கொண்டு செய்கின்றனர் என்பது விஞ்ஞான உண்மை.(எத்தனையோ வீடுகளில் "என் பிள்ளை பேசவே மாட்டேன்கிறான்" என்று ஒரு தாய் விசனப்படும் பொழுது "ஆண் பிள்ளை லேட்டாகத்தான் பேசும்" என்று சொல்லுவது வாடிக்கை.

4.ஒரே கேள்வியை பலவித கோணத்தில் அலுக்காமல் கேட்டு உண்மையை அறியும் வல்லமை இவர்களுக்கே உண்டு.

5.மற்றவர்கள் அறியக்கூடாது என்று குரலை தாழ்த்தி கிசுகிசுப்பது முதல்,மற்றவர்களுக்கு எட்ட வேண்டும் என்று உச்சஸ்தாயியில் பேசுவதில் இவர்களுக்கு நிகரில்லை.

6.மோப்ப உணர்விலும் இவர்களை அடித்துக்கொள்ள வாய்ப்பில்லை.ஒரு உணவகத்திற்கு சென்றால் உணவுப்பொருளை மோப்பம் செய்தே இன்னென்ன சமையல் பொருட்கள் சேர்த்து செய்த உணவுப்பண்டம் இது கண்டு பிடித்து சொல்வது முதல் எதிர் பிளாட்டில் இருந்து வரும் வாசனை,கீழ் பிளாட்டில் இருந்து வரும் சமையல் வாசனையை நுகர்ந்து எளிதில் இன்னவகை உணவு என்று கண்டுபிடிக்கும் தகுதி இவர்களுக்கே உரித்தானது.

7.செவிப்புலனிலும் செம்மையானவர்கள்.என்னதான் ரங்ஸ் எரிச்சல் தாங்காமல் லோ பிட்ச்சில் முணுமுணுத்தாலும் கரெக்டாக பாயிண்ட் அறிந்து பிலு பிலு வென்று பிடித்துக்கொள்வதில் கில்லாடிகள்.

8.பார்வைத்திறனைப்பற்றி கேட்கவும் வேண்டுமா?ஒரு கூட்டமான இடத்துக்கு சென்றாலும் தெரிந்தவர் தலை இவர்களது கண்களுக்கு சட்டென சிக்கிவிடும்.கூடவே வரும் ரங்ஸிடம் சொன்னால் கூட "எங்கே..எங்கே.."என்று கண்களாலே தேடுவாரே ஒழிய ரங்கஸால் அந்த தெரிந்த தலையை கடைசி வரை கண்டு பிடிக்கவே முடியாது.

10.தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இவர்களால் மட்டுமே லாபம் ஈட்ட முடியும் என்பது திண்ணமான உண்மை.போனை எடுத்தால் அது அனலாக கொதிக்கும் வரை பேசித்தீர்ப்பதில் சூராதிசூரர்கள்.

11.வீட்டில் அலமாரிகளில் மலை போன்று குவித்து பொருட்கள் இருந்தாலும் கண்பார்த்ததும் கையால் எடுக்கும் திறமை இவர்களைத்தவிர வேறு யாருக்குண்டு?

12.எதைச்சொன்னாலும் சட்டுன்னு புரிஞ்சுக்கற கற்பூரப்புத்தி இவர்களுக்கே உண்டு என்பது கண்கூடான உண்மை.

13.அதிக தோழமை உணர்வு இவர்களுக்கு மட்டுமே உரித்தானது.சட்டென பழகி விடுதல் கைவந்த கலை.கணவரின் தோழர்களின் மனைவிகளை ஸ்நேகிதமாக்கிக்கொண்டு இருக்கும் பெண்களில் எத்தனை பேர் இருப்பார்கள் என்றும்,மனைவிகளின் தோழிமார்களின் கணவர்களை ஸ்நேகிதமாக்கிக்கொண்டிருக்கும் ஆண்களில் எத்தனை பேர் இருப்பார்கள் என்று நீங்களே கணக்குப்போட்டுப்பார்த்துக்கொள்ளுங்கள்.

14.பஞ்சப்பாட்டு பாடிக்கொண்டிருந்தாலும் கமுக்கமாக சேமிப்பில் செம கில்லாடிகள் இவர்கள் என்பதிலும் சந்தேகம் இல்லை.

15.பிறந்தகத்து உறவினர்களையும்,புக்ககத்து உறவினர்களையும் பேலன்ஸ் செய்து ,சமாளித்து வாழ்வியலை அழகாக்குவதும் இவர்களே.

16.கடுகளவேணும் ஒரு சிறு பொருளைப்பார்த்தாலும் அது என்ன வென்று அடையாளம் கண்டு பிடிப்பதில் இருந்து மண்டையில் அது பற்றி ஏற்றிக்கொள்வது,மனசில் அது பற்றி படிக்கறது,பிரிதொரு சமயத்தில் அது எங்கே எப்படி,எவ்வளவுக்கு கிடைக்கும் என்பதில் ஞாபகம் வைத்துக்கொள்ளும் ஞானச்செல்விகள் இவர்கள் என்பதும் உண்மை.

17.ஒருத்தர் தெரிந்த மொழியில் பேசி புரியா விட்டாலும் புரிந்த மாதிரி காட்டிக்கொள்வது முதல்,புரியாதவர்களுக்கு புரியும் வரை அலுப்பு சலிப்பில்லாமல் திரும்பத்திரும்ப சொல்லி புரிய வைப்பதில் புண்ணியர்களும் இவர்களே.

18.செவிலியர்கள்,மருத்துவர்கள்,விமானப்பணிப்பெண்கள்..இப்படி அநேகர் சிரித்த முகத்துடன் வலம் வருவதில் பெண்களே அதிகம்.

19.பதின்ம வயதில் எப்படி இருந்தோமோ அப்படியே இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவதிலும்,அதனை செயல் முறைப்படுத்துவதிலும் பிரயத்தனப்படுவதில் இவர்கள்தான் முன்னனி யில் நிற்கின்றனர்.பெண்கள்,ஆண்களுக்கான ஜிம்களும் பியூட்டிபார்களிலும் சர்வே எடுத்தால் நிச்சயம் உண்மை புரியும்.அவ்வளவு ஏன்? எத்தனை வீடுகளில் காய்வகையாறாக்களை கட் செய்து முகம் முழுக்க அப்பிகொண்டும்,மூல்தானிமட்டியை பூசிக்கொண்டு முகத்தை காயவைத்துக்கொண்டும் பெண்கள் வலம் வருவதைப்பார்த்தாலே புரியும்.

20.இப்படியாக இயற்கையும் விஞ்ஞானமும்,சுற்றுப்புறமும் பெண்களுக்கு தன்னிகரில்லாத ஆற்றலை தந்திருப்பதை அனைவரும் ஒத்துக்கொள்ளுவார்கள்தானே?

இதே நேரம்"மங்கையாராய் பிறப்பதற்கு நல் மாதவம் செய்திடல் வேண்டுமம்மா" என்ற மொழியையும் நினைவு கூர்கின்றேன்.

டிஸ்கி:இதனை 2011 பெண்கள் தினமான மார்ச் ஏழு அன்று பதிவிடலாம் என நினைத்து பெண்களுக்கே உரித்தான அவசர குணத்தினால் இன்றே பப்லிஷ் செய்து விட்டேன்.